Tuesday, April 27, 2021

அவள் தினம்!!

அவள் தினம் !!


எங்கே எனக்கான கவிதை என்றாய்

மனம் பதறியது 

ஆம் தொலைத்து தான் விட்டேன் போல  

எல்லா இடங்களிலும் 

தேடிப் பார்த்துவிட்டேன்

இத்தனைக் காலமும் 

பாதுகாத்துவைத்திருந்த 

நம் காதல் நிமிடங்களை 

எங்கு தொலைத்திருப்பேன் 

என்னையே கேட்டுக்கொண்டு 

தேடினேன்...

ஆம் தொலைத்து தான் விட்டேன் போல 

கவிதை தேடி அலைந்தேன்

கிடைக்கவில்லை 

உன் புன்னகை

கிடைத்தது 

உன் சேட்டைகள்   

கிடைத்தது

இல்லை என் காதல் எங்கே என்றாய் 

மீண்டும் தேடினேன்

சொல்லவில்லை யாரும் 

அச்சமாக இருந்தது 

தொலைத்து தான் விட்டேன்னா?

இல்லை 

என் காதல் 

இன்னும் ஒரு 

தளிரை போல 

பிறந்த குழந்தை போல 

திறக்காத புத்தகத்தின் வாசத்தை போல

அணையா விளக்கை போல 

என்னுள் பத்திரமாக

பூட்டி தான் வைத்திருக்கிறேன் 

கவிதை கேட்ட 

உனக்கு 

இந்த கவிதையோடு 

என் காதலையும் 

பரிசாக 

உனக்களிக்க 

காத்திருக்கிறேன்!

என்னவளுக்கு இனிய பிறந்தநாள் 

வாழ்த்துகள்!!

-ப்ரியன்

Wednesday, February 17, 2021

இது உனக்கான பயணம்...!!!

 இது உனக்கான பயணம்...!!!


பயணம் தொடர நேரம் வந்தாயிற்று

எத்தனை நேரம்  என் கைகளுக்குள் 

உனது கைகளைப் பொதித்து 

கொள்வது!!


சத்தியமாக உனக்கான பிடி

இங்கு இல்லை அதோ

அங்குள்ளது!

அதைப் பிடித்துக்கொள்வாயாக...!!


நான் உன் ஒரு கையைப் 

பிடித்து இருந்தாலும் 

நீ உன் இன்னொரு கையால் இந்த 

உலகத்தின் கைகளை பற்று!!


உனக்கான நேரத்தில் 

உன் கால்கள் உலகத்தின் மடியில் பட்ட  

மறுநொடி உனக்கான தேடல் ஆரம்பிக்கும்...

உனக்கான பாதுகாப்பை  

நீயே விரைந்து

உறுதி செய்துகொள்....!!


உன் கரம் பிடிக்க நாங்கள் இருந்தாலும் 

சுற்றி உன்னை அறியா பலர் 

உன்பால் அறிந்து அன்பால் உன்னை

மறிக்க கூடும் ...

நீ உன் தேவையறிந்து

இருகப்பற்று  

உனக்கான வாய்ப்பை !!


பல இன்ப துன்பங்கள் கடக்க 

இருக்கும் நீ...

எந்த நிலையிலும் உனை நீயே 

நலம் காக்க கற்றுக்கொள்!!


இவ்வுலகு உனக்கு எதை தர காத்திருக்கிறதோ...

அதை துணிவுடன் எதிர்கொள்!!


அச்சம் உன்னை பின்னுக்கு தள்ளும் 

தைரியம் துணிவுடன் உன்னை 

வெற்றி மேடை ஏற்றும் ...!!


அரசே கூட உனக்கெதிராக சட்டம் 

அமைக்க கூடும்....

அநீ(ட்)திக்கு எதிராக போராடு 

பதில் வரும் வரை...!!


பூக்கள் தேவைப்படாது ஆனால் 

சாட்டை தேவைப்படும்

சில நேரத்தில்...!!


வா உன்னை வரவேற்க 

காத்திருக்கிறது 

சவாலான பயணம்...!!!


- ப்ரியன்


PC: Rekha Priyan

என் உயிர் ஸ்நேகிதிக்கு!!!

 வாழ்வும் வளமும்

அன்பெனக் கண்ணில் ஏந்தி

அகமெங்கும் பாச நிலமாகிய 

நடுநாட்டின் சிவந்த தேவதையே

இச்சுந்தரன் மனமாளும் மீனாட்சி தேவியே

தமிழுக்கும் எழிலுக்கும் உரியவளே

இசையின் லயமாகிய குழந்தையின்   தாய்மையே

இத்தனை வருடமாய்.....உயிர் நட்பாடும்

என்நெஞ்சாங் கூட்டுக்காரியே

உன் பாதக்கொலுசொலி சிணுங்கி ..

செம்மொழி கீதம் இழைத்து

நீ வாழும் நாளெல்லாம் 

குழந்தையின் சிரிப்பாய் 

குமரி வடிவாய்

குணம் மிகுந்த மணியாய்

மாசறு பொன்னாய் 

மங்கள ஒளியாய் 

மகிழ்ச்சியின் ஊற்றாய்

இன்பமே உயிராய்

இனிமையாய் 

கவிதையாய் 

உயிர்மையாய் 

இன்ப மழைநீராய் 

நிம்மதி பருகி

என்னுயிர் இணைத்து

வாழியடி என் ப்ரியசகி நூறாண்டு

என் ஆதி காற்றுக்கு

என் ஆதி ஒளிக்கு

என் உயிர் ஆழியில் ஒளிந்திருக்கும் 

என் உயிர் ஸ்நேகிதிக்கு 

என் அன்பும் முத்தங்களும்...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகளும்...😍😘😘😘💐🎂🎉🎊

இப்படிக்கு பூக்கள்....!

 வாழ்துக்கள்...! இப்படிக்கு பூக்கள்....!


இவள் பூக்களை நேசிப்பவள்...

அவை இவளை நேசிப்பது அறியாமல்...


இவள் மொட்டுகளோடு பேசுபவள்...

அவை இவளிடம் பேசுவது தெரியாமல்...


இவள் சிகை பூக்களுக்காக காத்திருக்கும்...

அவை இவள் சிகை சேர பூத்து நிற்கும்...


இவள் சாமிக்கு பூகோர்த்து மாலையாக்குவாள் 

அவை இந்த சாமிக்கு மாலையாக வேண்டி நிற்கும்...


இவள் பூவின் மேல் உள்ள பனித்துளியை ரசிப்பவள்...

அவை பனித்துளி இவளென வியந்து சிலிர்க்கும்...


இவள் தேனீக்களுக்கு முன் தேனை சுவைத்து மகிழ்பவள்...

அவை இவளுக்காக தேனீக்களிடம் இருந்து தேனை மறைத்து சேமித்திருக்கும்...


இவள் பூ உதிர்வதை விரும்பாதவள்...

அவை உதிர்வதே இவள் பாதமலர்க்காக... 


என் பூமகளே!

நீ 

மலர்ந்தெழுவாய் 

மலர்கலாய் பிறந்தெழுவாய் 

உன் புன்னகைகொண்டு 

பூக்களை வாடாமல்

வாசமாய் நிறைக்கச்செய்வாய்!


என்னவளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...


-ப்ரியன்

மயக்கி

 மயக்கி...!!!😘😍🥰


ஆம் இவளை இப்படியும் சொல்லலாம்...

 பனி குடம் உடைந்து தோல் சுருங்கி கோவத்தில் வெளிவந்தவள்..

கோபம் திமிர் அழகு குறும்பு அடம் தைரியம் அனைத்தையும் 

அம்மாவிடம் பிடிங்கி தன்னுடன் எடுத்து  வந்தவள்..

சேட்டைக்காரி....

பேச்சு நடை ஆட்டம் ஓட்டம் பாசம் சேட்டை 

அனைத்தும் அக்காவிடம் கற்று கொண்டவள்..

ஒரு படி மேல் சென்று அவளுக்கு அடியும் வாங்கி கொடுப்பவள்..

அப்பாவின் குட்டி அம்முலு...

அப்பா! ஏன் தாடியை கழட்டி வச்சிட்ட இந்த கேள்வி 

அவளுக்கே உரித்தானது... 😍😘

அப்பாவுக்கு ஒரு குட்டி முறுக்கு கொடு என்பேன்..

இந்தா பெரிய முறுக்கு நீ பெருசா இருக்கேல...😜

அப்பா! இந்தா ஆ வச்சுக்கோ நான் வேலை செய்து கொண்டே சுவைத்தேன்..

நல்ல இருக்கா.. கொஞ்சம் பொறு இன்னும் இருக்கு....

பார்த்தால் மூக்கில் இருந்து...சிறப்பு...🤮

இதற்கு சிரிப்பவர்களுக்கும் இது நடக்கலாம் நடக்கும் நடக்கணும்😇

இப்படி இவள் தினசரி ஆச்சிரியங்களை நிகழ்த்தி 

எங்களை மயக்குவதனால் இவள் மயக்கி ஆகிறாள்..

இந்த படத்தை நீங்கள் பார்த்திருந்தால் இந்நேரம் 

நீங்கள் மயங்கியிருப்பீர்கள் இந்த மயக்கியிடம்...

Saturday, April 26, 2014

என்னவளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்... :)

என்னவளுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்... :)

இங்கு நான் என் கவிதை படைக்க வரவில்லை...
மாறாக என் கண்ணீர் சிந்த வந்திருக்கிறேன்...
எனக்கும் தெரியும் கவிதையை விட நம் கண்ணீருக்கு விலை அதிகம்..
காதல் என்ற அத்தியாயத்தில் கவிதை ஒரு பாதி என்றால் அதில் கண்ணீர் தான் மீதி...
அது ஆனந்த கண்ணீராக இருக்கலாம்...நம் கண்ணீரோ காத்திருப்பின் கண்ணீர்...
காத்திருப்பதில் ஒரு சுகம் இருக்கிறது என்று சொல்லும் அனைத்து கவிங்கர்களுக்கும் தெரியும் அது மிகபெரிய ஒரு பொய் என்று...

காதலிக்கும் போது செய்கிற சத்தியம் அனைத்தும் கல்யாணம் நடந்தேறிய அடுத்த கணத்தில் மறப்பது தான் இந்நாள் காதலின் மகத்துவம்...
அதை செய்த நானும் ஒரு சராசரி மனித அரசியல்வாதி என்பதை அறிந்து வெட்கி தலை குனிகிறேன்..

நேரம் மிகவும் பொன்னானது என்று மறைந்த என் தகப்பன் சொல்லியும் கேட்கவில்லை தினம் பாடும் என் தாய் சொல்லியும் கேட்கவில்லை படிக்கும் காலத்தில் நரை விழுந்த என் தமிழம்மா சொல்லியும் மதிக்கவில்லை...

ஆனால் இன்று நீ இல்லாத இந்த ஓவவ்வறு நொடியும் ஓவவ்வறு நாளும் வீணாகும் போது...காலத்தின் அருமை பின்னந்தலையில் தினமும் ஓங்கி அடித்து கொண்டே இருக்கிறது...

மன்னிப்பு... இது இல்லை என்றால் உலக அமைதி என்ற சொல்லே பிறந்திருக்க வாய்ப்பில்லை... எந்த நேரத்தில் விருமன் அந்த வசனத்தை சொன்னானோ அது என் வாழ்வில் வெறும் வசனமாக இல்லாமல் நம் உறவை காக்கும் இறைவாக்காகவே உள்ளது...

என்னை மட்டும் நம்பி உன் வாழ்வை என்னிடம் ஒப்படைத்த நீ... நான் தினம் வணங்கும் என் தாயினும் மேலானவள்... இன்று வரை நான் உன் பிரியங்களை என்னிடம் பிரித்து காட்ட எந்த ஒரு அவகாசமும் அமைத்து கொடுக்க தவறி  விட்டேன்... இவை அனைத்திற்கும் காரணம் நான் என்பதால் இன்று வரை மன்னிப்பை தவிர உன்னிடம் வேறு எதுவும் எதிர்பார்க்க முடியவில்லை...

ஆம் மன்னிக்க தெரிந்த நீயும் ஒரு பெரிய மனுஷி தான்...
நானும் ஒரு  பெரிய மனுஷன் தான் தினம் ஒருமுறையாவது உன்னிடம் மன்னிப்பு கோருவதால்...

இந்த பிறந்த நாள் பரிசாக உனக்கு நான் என்ன பரிசு குடுத்தாலும், என்ன கவிதை எழுதினாலும், என்ன அற்புதம் செய்தாலும் உன்னை திருப்தி படுத்த முடியாது என்பதை நான் அறிவேன்... அதை கூட அறியவில்லை என்றால்....... என் கொடும்பாவியை கொளுத்தாமல்... என்னையே நேரடியாக தீக்கு இரையாக்கலாம் ...

ஆதலால் உனக்கு நான் கவிதை எழுத போவது இல்லை, பரிசு கொடுக்க போவதில்லை, எந்த அற்புதமும் செய்ய போவதில்லை,
அதர்க்கு பதிலாக ஒரு காதலன் செய்யும் சத்தியமாக இல்லாமல் உன்னில் ஒரு பாதியான நான் உனக்கு ஒரு சத்தியம் செய்து தருகிறேன்...

என்றும் உன் கண்ணீர் துடைத்து, பிரிவை விலக்கி, சோகம் நீக்கி, துயர் துடைத்து,  தனிமை தவிர்த்து, கைகள் கோர்த்து, விழிகள் பார்த்து, காதல் பொங்கி, கலவி செய்து, 
நன் சிவனாகவும்  நீ என் பார்வதியாகவும் கண் மூடும் வரை உன் அருகில் இருந்து மடிவேன் என் உயிரே!!!......

--°ღ•ப்ரியன்°ღ•





Friday, April 25, 2014

நண்பர்கள் தின வாழ்த்துகள்... :-) :-) :-)

Happy Friendship Day....to All..!!...
அரைகால் டவுசெர்... குட்டியுண்டு பட்டன் டை காலத்திருந்தே...
சுவற்றில் ஒன்றாய் ஒன்றுக்கு போய்... பெஞ்சில் பென்சில் வைத்து...
கணக்கு வாத்தியார் சட்டையில் இன்க் தொழித்து...
சரவணனுக்கும் மாலினிக்கும் பொம்மை கல்யாணம் நடத்தி...
சர்ச் லைட்டை கிரிகட் விளையாடி உடைத்து...
ஹிந்தி இல்லாத ஸ்கூல் கண்டுபிடித்து...
குப்பைமேட்டு இஸ்கூலுக்கு நண்பன் பின்னே சென்று...
டவுசரில் இருந்து பேண்டுக்கு மாறி... 
சைக்கிளில் இருந்து அரசு பேருந்தில் தொங்கி...
தமிழோடு புதிய தமிழாக அனைத்து பசுமையான வார்த்தைகளையும் கற்று...
முளைக்காத மீசையை முறுக்கி...
பெண்கள் பள்ளி பேரழகிகளின் கண்ணில் கெமிஸ்ட்ரி தேடி அலைந்து...
பிஸிக்ஸில் பெயிலாகி...
அப்பா எப்பவும் போல பையனுக்கு உடம்பு சரில்லன்னு சொல்றதும்...
வாத்தியார் பதிலுக்கு அவிங்க குருப்பே சரில்லைன்னு சொல்றதும்...
என்ன மாப்ள ஒழுங்கா படிசுர்க்கலாம்னு பரிச்சைக்கு முதல் நாள் சொல்வதும்...
பரீட்சை முடிந்தவுடன்... மாப்ள நானும் பெயில் நீயும் பெய்லான்னு நிம்மதி அடைவதும்...
இப்படி... திக்கிமுக்கி பள்ளி முடித்து
திசைக்கொன்றாய் சிதறியபின்னும்
வாழ்க்கையை எப்போதும்
அழகான நினைவுகளால்
நிரப்பி நெஞ்சோடு கலந்திருக்கும்...
அக்காலம் முதல் இக்காலம் வரை 
என்னை வருடத்தில் ஒரு நிமிடமாவது நினைத்த :) ... நினைக்க மறந்த நண்பர்களுக்கும்... :(
நண்பர்கள் தின வாழ்த்துகள்...  
--°ღ•ப்ரியன்°ღ•